Friday, January 9, 2009

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

'சரித்திரம், மகா சக்தி பெற்றது. அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல!'

-நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

1941, டிசம்பர் மாதத்தின் ஓர் அதிகாலைப் பொழுது. பனி படர்ந்த கல்கத்தா நகரத்தின் எல்ஜின் சாலை.

மரங்கள் அடர்ந்த ஒரு கட்டடம். இலக்கம் 38 என எழுதப்பட்ட அந்தக் கட்டடத்தினை நொடிக்கு ஒருதரம் நோட்டம் விட்டவாறு ஒருவன் நடமாடிக்கொண்டு இருக்கிறான். அவன், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காவல் அதிகாரி. அந்த வீட்டின் முன் சில காவலர்கள் துப்பாக்கிகளுடன் நின்றிருக்கின்றனர்.

அந்தச் சாலை வழியாக வரும் வங்காள இளைஞர்களில் ஒருவன், மரங்கள் சூழ்ந்த அந்த வீட்டைக் காண்பித்து, ''இங்குதான் போஸ் பாபு தங்கியிருக்கிறார்'' என ஆவலுடன் காட்ட, நண்பன் அந்த வீட்டைப் பரவசத்துடன் பார்த்தபடி கடந்து செல்கிறான்.

அந்த வீட்டின் முற்றத்தை ஒரு பணிப் பெண் துப்புரவு செய்துகொண்டு இருக்கிறாள். அவள் அருகே வந்து நிற்கும் இன்னொரு பணியாளன், ''பாபு எழுந்துட்டாரா?'' எனக் கேட்கிறான்.

''எனக்கெப்படி தெரியும்? அவரது முகத்தை நான் பார்த்தே நான்கு நாளாச்சு!'' என்கிறாள்.

''அப்படியா? நீதானே தினமும் மாடி அறைக்குச் சாப்பாடு கொண்டுபோகிறாய்.''

''ஆமாம். நான் உணவு கொண்டுபோய் அறை வாசலில் நிற்பேன். திரைக்குப் பின்னால் அவர் நிற்பார். 'வெளியிலேயே வைத்துவிட்டுத் திரும்பாமல் போ' என்பார். தட்டை அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவேன். கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தால், சாப்பிட்ட தட்டு மட்டும் வெளியே இருக்கும். எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன்.''

''அப்படியா, போஸ் பாபு எதற்கு அப்படிச் செய்கிறார்? ஒரே மர்மமாக இருக்கிறதே?''

''தெரியவில்லை, பாபுவுக்கும் விவேகானந்தர், அரவிந்தர் போல சாமியார் ஆகும் எண்ணம் போல. அதனால்தான் முழு நேரமும் அறைக்குள்ளேயே அடைந்துகிடக்கிறார். யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என உத்தரவு போட்டிருக்கிறார்.''

''சரி சரி! நீ வேலையைப் பார்!'' என்று வெளியில் வரும் அந்தப் பணியாளன் சற்றுத் தொலைவில் நிற்கும் பிரிட்டிஷ் உளவு அதிகாரியிடம் வந்து ரகசியமாக, ''நான் நினைத்தது சரிதான். பாபு சாமியாராகப் போகிறாராம்.'' எனக் கூற... அதிகாரி பூரிக்கிறார்.

அது சுதந்திரப் போராட்டம் இந்தியா முழுக்க உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம். ஒரு வழக்கு காரணமாக சிறையில் தள்ளப்பட்ட போஸ், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். 24 மணி நேரமும் போலீஸார் சீருடையிலும் மாற்றுடையிலுமாகஅவரது வீட்டைக் கண்காணித்துக்கொண்டு இருந்தனர். இத்தனை பாதுகாப்பு வேறு எந்தத் தலைவருக்கும் இல்லை. சுபாஷின் மீது அவ்வளவு பயம்.

இந்தச் சூழலில்தான் போஸ் கடந்த சில நாட்களாக வெளியே தலைகாட்டவே இல்லை எனும் தகவல் அவர்களை மேலும் பதற்றமாக்கி இருந்தது. அடுத்த சில நாட்களில் வேறு மாதிரியாக ஒரு தகவல் வந்து, அவர்களுக்குள் கிலியை உண்டாக்கியது. வழக்கமாகத் திரைக்கு அப்பால் காணப்படும் உருவம்கூட இப்போது தென்படுவதில்லை. ஆனால், சாப்பாடு மட்டும் காலியாகிறதாம்.

மறுநாள்... டிசம்பர் 26. துப்பாக்கியுடன் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது போலீஸ். அறைக் கதவைத் தட்டி, ''போஸ் வெளியே வாருங்கள்'' என்று உருமினர். பதில் இல்லை. கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அறை காலியாகக் கிடந்தது. ''இத்தனை காவலில் அவர் எப்படித் தப்பித்துவிட முடியும்.?'' அதிகாரிகள் ஆத்திரத்தில் இரைந்தனர். வீட்டின் சகல அறைக் கதவுகளும் திறக்கப்பட்டன. எல்லா இடங்களும் கைகளை விரிக்க, ஆத்திரம் அவர்களைப் பைத்தியங்களாகக் கூச்சலிடவைத்தது. சுபாஷ் தப்பிவிட்டார்.

தலைநகரம் அதிர்ந்தது. மறுநாள் இந்தியாவே வியந்தது. மண்ணைப் பிடுங்கியவனின் கண்களிலேயே மண்ணைத் தூவித் தப்பித்த போஸின் இந்த சாகசம், அவர் மேல் கட்டற்ற வசீகரத்தை உண்டாக்கி, உலக நாயகனாக உயர்த்திப் பிடித்தது.

அன்று காணாமல் போன போஸ், இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூரில் தோன்றினார். இந்திய தேசிய ராணுவப் படை எனும் தமிழர் நிறைந்த ஆற்றல்மிக்க பெரும்படையை வழி நடத்தினார். சிங்கப்பூரிலிருந்து பர்மா வழியாக ஊடுருவி, 1944 ஜூன் 14-ம் நாளன்று மணிப்பூரில் இருந்த பிரிட்டிஷ் படையை ஓட ஓட விரட்டியடித்து, அங்கேயே தேசியக் கொடியையும் ஏற்றி, இந்தியாவைச் சுதந்திர நாடாக அறிவித்த சாதனை இருக்கிறதே... அது அத்தனை சாதாரண விவரிப்புக்கு ஆட்பட்டதல்ல. அவரது துணிச்சலும், சாகசமும், மதிநுட்பமும் மாவீரன் அலெக்சாண்டருக்கு நிகராக ஒப்பிடத்தகுந்த ஆற்றல் மிக்கவை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...

இந்திய சரித்திரம் இதுவரை காணாத அந்த சாகசங்களின் பேரரசன் பிறந்தது அறிவில் சிறந்த வங்காளத்தில். அன்று அது ஆன்மிகத்தில் மூழ்கித் திளைத்த காலம். ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகிய மகான்கள் அவதரித்த அந்தப் பூமியில், ஒரு முக்கிய வர்த்தக நகரம் கட்டாக். தற்போது ஒரிஸ்ஸாவில் இருக்கும் இந்த நகரில் கவனிக்கத்தக்க குடும்பம் ஜானகிநாத்தினுடையது. அரசு வழக்கறிஞரான அவர் வெள்ளை துரை போல டிப்டாப்பாக உடை உடுத்தி, படோடோபமாக வாழ்க்கை நடத்தியவர்.

ஆனால், அவரது மனைவியான பிரபாவதியோ பூஜை புனஸ்காரத்திலேயே வாழ்க்கையை நடத்த விரும்பும் சராசரி இந்தியப் பெண். காதலின் சாட்சியாக, வரிசையாக 8 குழந்தைகள் பெற்ற அந்தத் தம்பதியருக்கு 1897 ஜனவரி 23-ல் பிறந்தது ஓர் ஆண் குழந்தை. சுபாஷ் எனப் பெயரிட்டு கொஞ்ச நாட்கள் கொஞ்சி மகிழ்ந்ததோடு சரி. அடுத்தடுத்து வரிசையாகப் பிள்ளைகள். மொத்தம் 16 குழந்தைகள். போதாக்குறைக்கு கணவனின் சகோதரர்களின் குடும்பம், அவர்களது குழந்தைகள் வேறு. பாவம்... அந்தத் தாயும் எத்தனை பேரைத்தான் கவனிக்க முடியும். சுபாஷ் பின்னாளில் பெரிய ஆளாக வரப்போகிறான்... அவனை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள் என அப்போது யாராவது ஜோதிடம் சொல்லியிருந்தாலும், அவளால்கவனித்துக் கொள்ள முடியாது. அப்படி ஒரு வேலை!


'பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது!'

- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
ஜானகிநாத் போஸூக்கு அதிர்ச்சி. பதற்றத்தில் விரல்கள் நடுங்கின. மகன் சுபாஷைக் காணவில்லை. வீடே அமர்க்களப்பட்டது. கட்டாக் நகரம் முழுக்க ஆட்கள் தேடிப் பறந்தனர். எப்படியும் மகன் வந்துவிடு வான் என மனதைத் தேற்றியபடி கதவருகிலேயே இரவு முழுக்கக் காத்திருந்த பிரபாவதிக்கு மறுநாள் காலைதான் அடிவயிறு புரட்டியது.

தேடிச் சென்ற எல்லோரும் வெறுங்கையுடன் வீடு திரும்பியதைப் பார்த்ததும் அவளால் தாங்க முடியவில்லை. காணாமல் போன மகனைத் தேடுவதா அல்லது கலங்கி நிற்கும் மனைவியைத் தேற்றுவதா என ஜானகிநாத்துக்குப் புரியாத நிலை. மாகாணாத்திலேயே இரண்டாவதாக சிறந்த மதிப்பெண் பெற்று, ஆசிரியர்களால் மிகச் சிறந்த மாணவன் எனப் பாராட்டையும் பெற்ற போஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். மகன் என்ன ஆவானோ? இனி அவனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்பதுதான் அவரது மனக் கவலை. ஆனால், பிரபாவதி அப்படி இல்லை. மரங்களுக்குத் தெரியுமல்லவா கிளைகளின் திசை. அது போலத்தான் அவரும். தன் மகனைப் பற்றி ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். நிச்சயம் தன் மகன் ஒருநாள் திரும்பி வருவான். அப்படி அவன் வரும்போது ஒருக்காலும் கதவு மூடியிருக்கக் கூடாது என்பதற்காக பிரபாவதி இரவு பகல் எல்லா நேரமும் கதவைத் திறந்தேவைத்திருந்தார்.

மாதங்கள் இரண்டு கழிந்த ஒரு பகல் பொழுதில் வாசலில் நிழலாட்டம் கண்டு பிரபாவதி வெளியில் வர, அடுத்த நிமிடம் வீடே அமர்க்களப்பட்டது. நீண்ட நாள் கழித்துக் காணாமல் போன மகனை திரும்பக் கண்ட உணர்ச்சிப்பெருக்கில் தாய் தந்தை இருவருக்கும் உடல் பதைத்தது. ஓடிச் சென்று மகனை ஆரத் தழுவிக்கொள்ளத் துடித்தாலும், ஏதோ ஒன்று இருவரையும் தடுத்தது. பல வருடங்கள் தியானத்திலும் யோகத்திலுமாகக் கழித்து மீண்டெழுந்தவனைப் போல, சுபாஷின் முகத்தில் ஓர் ஞானியின் முகப் பொலிவு.

சுபாஷின் இந்த மாற்றம் குறித்து பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டனர். இடைப்பட்ட காலத்தில் ஆன்மிக நாட்டம் காரணமாக யாரோ மிகப் பெரிய மகானைச் சந்தித்து சுபாஷ் தீட்சை பெற்று வந்திருக்கிறான் எனக் கிசுகிசுத்துக்கொண்டனர்.ஆனால், சுபாஷூக்கு மட்டும்தானே தெரியும் இடைப்பட்ட காலத்தில் நடந்த கதை.

வீட்டைவிட்டுப் போனதென்னவோ, ஆன்மிக நாட் டத்தில்தான். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போல நாமும் ஒரு துறவியாக முடியும் என்ற நம்பிக்கையில்தான் ஒரு குருவைத் தேடி கால் போனபோக்கில் நடந்தார். ஆனால், அவருக்கு வழியெல்லாம் கிடைத்தது ஏமாற் றம் மட்டுமே. அருகில் செல்ல செல்லத்தான் ஆன்மிக உலகின் இன்னொரு பக்கம் அவருக்கு விளங்கியது. சடங்கு சம்பிரதாயங்களின் போலித் தன்மை அவரது அதுவரையிலான நம்பிக்கைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்தது. மனித சேவைதான் உயர்ந்த ஆன்மிகம். மனிதகுலத்துக்கான பெரும் தியாகத்தை வாழ்க்கையில் லட்சியமாகக்கொண்டால், அதைவிட பெரும் யோகம் எதுவும் இல்லை. என்பதை முழுமையாக உணர்ந்தார். இனி இந்த வாழ்க்கை நமக்கானதல்ல, சமூகத்துக்கானது என்ற தீர்மானம் அவருக்குள் விதையாக விழுந்தது. அதன் பிறகுதான் அவரது கால்கள் தானாக வீட்டை நோக்கித் திரும்பின. அவரது மனதில் உண்டான இந்த ஞானப் புரட்சிதான் அவரது சுபாவத்தின் மாற்றத்துக்கான உண்மையான காரணம். மற்றபடி யாருடைய தீட்சையும் அருளும் அல்ல.ஆனால், வீட்டார் மகனுக்குள் நேர்ந்திருக்கும் இந்த மாற்றத்தை புரிந்துகொள்ள நெடு நாட்கள் காத்திருக்க நேர்ந்தது.

கொல்கத்தா, இணை பிரியாத புது மணத் தம்பதியாகப் பழைமையும் புதுமையும் எப்போதும் கைகோத்துக் காணப்படும் நகரம். கலைநயமிக்க பிரமாண்ட கட்டடங்கள், நெரிசல்மிக்க அகண்ட வீதிகள், பாம்புகள் போலக் குறுக்கும் நெடுக்குமாக நகரும் ட்ராம் வண்டிகள், கை ரிக்ஷாக்கள் என அனைவரையும் மயக்கும் விநோத நகரம். அங்கிருந்த மாகாணக் கல்லூரியில் பட்டப் படிப்புக்காக வந்திருந்தார் சுபாஷ். கல்லூரியில் சுபாஷ் அனைத்திலும் முதன்மையாக விளங்கினார். அவரது கருத்தை உள்வாங்கி வழிநடக்கும் சில மாணவர்களும் அவருடன் சேர, நட்சத்திரக் கூட்டத்திடையே ஒரு நிலவு போல மாணவர்களிடையே தனித்துப் பிரகாசித்தார் சுபாஷ்.

மகத்தான லட்சியம் மனதில் தோன்றிவிட்டால், பிறகு அந்த மனிதன் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை அந்த லட்சியமே தீர்மானிக்கும். அப்படியாக, சுபாஷின் பாதையில் எதிர்ப்பட்டார் வங்க மகாகவி ரவீந்திரநாத் தாகூர். அதன் பிறகு கல்லூரியில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் சுபாஷின் கால்கள் தாகூரின் சாந்திநிகேதன் நோக்கி ஓடத் துவங்கின. கிராமங்களின் வளர்ச்சிப் பற்றிய சுபாஷின் ஈடுபாடும் அக்கறையும், தாகூரை ஆச்சர்யப்படுத்தின.

மேலும் சுபாஷூக்கு அப்போது வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் இருந்த இன்னொரு மகாகவி, அரவிந்தர். காங்கிரஸில் சோஷலிஸக் கருத்துக்களைப் புகுத்தி வங்காள விடுதலை இயக்கத்தில் பல புயல்களை உருவாக்கிய புரட்சி மனிதர். பிற்காலத்தில் ஆன்மிக நாட்டம் காரணமாக பாண்டிச்சேரிக்கு வந்து நிரந்தரமாகத் தங்கியவர். ஆன்மிகத்தையும் அரசியலையும் இரண்டு கண்களாகப் பார்த்த இவரது கொள்கைகள் சுபாஷைப் பெரிதும் கவர்ந்தன. இப்படியாக அவரது கல்லூரி வாழ்க்கை மனோவேகம், வாயுவேகம் என்பார்களே அப்படியானதொரு உள்ளக் கொந்தளிப்போடு கழிந்தது.

அவ்வப்போது சில கேள்விகள் அவருக்குள் எழும். நாம் யார்? எதற்காக இப்படிப் பெரிய மனிதர்களைத் தேடி ஓட வேண்டும்? உண்மையில் நம்மால் மகத்தான காரியங்களைச் செய்ய முடியுமா? அப்படியான அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்வது போல அவரது கல்லூரி வாழ்க்கையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

கல்லூரியில் முரட்டுத்தனமும் இனவெறியும்கொண்ட ஒரு வெள்ளைப் பேராசிரியர் அவ்வப்போது இந்திய மாணவர்களின் மேல் வன்முறையையும் அதிகாரத்தையும் பிரயோகிப்பது வழக்கம். கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. குறிப்பிட்ட நாளன்றும் மாணவன் ஒருவனை அந்த பேராசிரியர் அடிக்க, பிரச்னை பூதாகரமாக வெடித்தது. மாணவர்கள் ஒன்று திரண்டனர். சுபாஷ் அவர்களுக்குத் தலைமை தாங்கினார். இனி இவர்களிடம் நேர்மையாக முறையிட்டுப் பலன் இல்லை என முடிவெடுத்த சுபாஷ், மாணவர்களை அழைத்துக்கொண்டு அந்த பேராசிரியரின் இருப்பிடத்துக்கே சென்றார்.

அங்கே...